×

வரும் 23ம் தேதி வாக்கு எண்ணும்போது எடப்பாடியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி: அரவக்குறிச்சி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

கரூர்: ``வரும் 23ம் தேதி வாக்கு எண்ணும்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி’’ என்று அரவக்குறிச்சி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். தளவாப்பாளையத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு கைச்சின்னத்தில் அதிகமாக வாக்களித்துள்ளீர்கள். அவரும் வெற்றி பெற போகிறார். ( நீங்கள் வாக்களித்தது உண்மைதானே என்று மக்களை பார்த்து கேட்டார். அப்போது மக்களும் வாக்களித்தோம் என்று ஒட்டுமொத்தமாக தெரிவித்தனர்) மத்தியில் மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மாநிலத்தில் எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.  அதற்கு நீங்கள் அனைவரும் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜிக்கு வாக்களிக்க வேண்டும்.

ஏற்கனவே அரவக்குறிச்சி தொகுதி கடந்த ஒரு ஆண்டாக அனாதையாக இருந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் எடப்பாடி ஊழல் செய்கிறார். அவரை மாற்ற வேண்டும் என்று 18 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். இதனால் சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தார். அவர்களில் செந்தில்பாலாஜியும் இருந்தார். தற்போது அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் வந்துள்ளது. எனவே, அவர்களுக்கு பாடம் புகட்ட, புத்தி புகட்ட நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் மோடி தொடர்ந்து பின்தங்கி வருகிறார். மோடி வீட்டுக்கு செல்வது உறுதியாகி விட்டது. இதேபோல் வரும் 23ம் தேதி வாக்கு எண்ணும்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி. எடப்பாடி ஆட்சி மெஜாரிட்டி இல்லாத ஆட்சி. 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியதால் இந்த எடப்பாடி ஆட்சி நீடித்து வருகிறது. நடந்து முடிந்த 18 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும். வரும் 19ம் தேதி நடக்கவுள்ள திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளிலும் தி.மு.க கண்டிப்பாக வெற்றி பெறும்.  

இந்த 22 தொகுதிகளிலும் தி.மு.க.  வெற்றி பெற்றால் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க.  ஆட்சி அமையும்.  எடப்பாடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். எடப்பாடி தேர்தலில் தோற்க போகிறார் என்பதை தெரிந்த காரணத்தால் தற்போது 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனையடுத்து இவர்களின் சூழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும்  வகையில் நான் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லை என்று கடிதம் வழங்கியுள்ளேன். சபாநாயகர் மீது கொடுக்கப்பட்டுள்ள நோட்டீசுக்கு தீர்வு எட்டாமல் எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மேலும் உச்சநீதிமன்றம் சபாநாயகரின் நடவடிக்கைக்கு தற்போது தடை வழங்கியுள்ளது. ஆளும் கட்சியினர் எந்தவித சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள். இதனால் நீங்கள் அனைவரும் செந்தில்பாலாஜிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். செந்தில்பாலாஜிக்கு வாக்களித்தால் தொகுதிக்குட்பட்ட புகளூர் பகுதியில் தடுப்பணை கட்டி தரப்படும். அரவக்குறிச்சியில் கலை அறிவியல் கல்லூரி அமைத்து தரப்படும்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் விரிவுப்படுத்தப்படும். காவிரி நீர் செல்லாத பகுதிகளில் வாய்க்கால்கள் அமைத்து அனைவரும் விவசாயம் செய்ய காவிரி தண்ணீர் கொண்டு செல்ல தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அரவக்குறிச்சியில் வெற்றி பெற்றால்  இருக்க இடம் இல்லாமல் உள்ள ஏழை, எளிய 25,000 பேருக்கு தலா 3 சென்ட் நிலம்  தருவதாக செந்தில்பாலாஜி கூறி உள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்க திட்டம்.  இதனை வரவேற்று தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் உள்ள இடமில்லாத  ஏழைகளுக்கு இந்த திட்டத்தினை விரிவுபடுத்த உள்ளேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

கொட்டும் மழையில் பிரசாரம்
குப்பம் பகுதியில் பிரசாரம் முடித்த ஸ்டாலின், ஆரியூர் நோக்கி சென்றார், அப்போது பலத்த மழை கொட்டியது. மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காத்திருந்தனர். இதனால், மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பேசினார். அவர் பேசியபின் பொதுமக்கள் தொப்பை தொப்பையாக நனைந்து கொண்டே சென்றனர்.

4 கி.மீ. நடந்து சென்று வீதி வீதியாக பிரசாரம்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து மு.க.ஸ்டாலின், நேற்று பள்ளபட்டி பஸ் நிலையம், மார்க்கெட் ஆகிய இடங்களில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். இதற்காக, காலை 9 மணியளவில் ஸ்டாலின், பள்ளப்பட்டி பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து நடந்து சென்று பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள், கடைக்காரர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் அருகே உள்ள தினசரி மார்க்கெட்டுக்குள் சென்றார். அங்கு காய்கறிகள் வாங்க வந்திருந்தவர்கள், வியாபாரிகள், ஸ்டாலினை கைகுலுக்கி வரவேற்றனர். இதையடுத்து சந்தைப்பேட்டை தெரு, சாகிப் தெரு, ஆலமரத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய தெருக்களில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். கலிபா சாகிப் தெருவுக்கு சென்ற ஸ்டாலின், அங்கிருந்த இஸ்லாமிய பெண்களை பார்த்து நோன்பு கடைபிடிக்கும் இந்த நேரத்திலும் என்னை வரவேற்க திரண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் என்று ஸ்டாலின் கூறினார். இதை இஸ்லாமிய பெண்கள் புன்னகையுடன் வரவேற்றனர். மொத்தம் 4 கிமீ தூரம் அவர் நடந்து சென்று ஆதரவு திரட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : home ,Edappadi ,campaign ,Aravasa Kuchi ,MK Stalin , Counting,votes, 23rd, Aravalli ,campaign
× RELATED அன்னையர் தினம் எடப்பாடி வாழ்த்து